Sunday, May 15, 2011

முத்தச்சுவை!


முத்தமிடவே நேரம் போதவில்லை.....

கவிதை வேணுமாம் கவிதை.....

இன்னும் நான்கு கணம்

உன் முத்தத்தைத் தொடர்....

கவிதை எழுத மனமிருந்தால்

எழுதித்தருகிறேன்,

அந்த முத்தச்சுவை பற்றி!

--சிவசங்கர்.

Sunday, February 13, 2011

முத்தம்!


முத்தக் காட்சியின்,
முதல் வரியில்,
முதல் எழுத்தானது,
உன் மூச்சும்,
என் மூச்சும்!

காதலர்தின நல்வாழ்த்துக்கள்!

Monday, December 13, 2010

காதல் கதறல்கள்....


காதலற்ற நொடிகளில்

கவிதை சொல்வது போலவே,

நீயற்ற நேரங்களில்,

பொழுதைக் கழிப்பது!

**********************************************************************************************

விரும்பிய விழுமியங்கள்,

விருப்பத்துடனே விழுகின்றன,

உனக்காய் எழுதும்

ஒவ்வொரு பொழுதும்.

**********************************************************************************************

வெளிகளற்ற வெளியில்,

மொழிகளற்றே பேசுகிறோம்,

நீயும் நானும்.

**********************************************************************************************
மௌனம்கூட மௌனமாகியது,

நீ எந்தன்

இதழ் பதித்தபோது!

**********************************************************************************************
சத்தியமாய் நான்

குருடன்தான்,

உன்னைக் காணா

ஒவ்வொரு நொடியும்.

**********************************************************************************************
நீ வெட்கித் தலைகுனியும்

ஒவ்வொரு பொழுதுக்குமாய்த்

தவிக்கிறேன்,

வெட்கமின்றியே நானும்!
**********************************************************************************************
-சிவசங்கர்.

Saturday, December 4, 2010

முத்தம்.....


வருத்தமற்ற நொடிகள்

ஏங்கிக்கிடக்கிடக்கின்றன,

உன் செவ்விதழ் சிந்தும்

முத்தத்திற்காய்!


--சிவசங்கர்.

Monday, October 25, 2010

கவிதைகளின் வார்த்தைகள்!

என்னவளைப் பற்றிய கவிதைகளில்,

வர்ணித்த வார்த்தைகளெல்லாம்,

அவளின் அழகை முன்னிறுத்தி,

அடக்கியே வாசிக்கின்றன....


--சிவசங்கர்.

Tuesday, October 19, 2010

காதலியற்ற தீபாவளி!


உனைப் பிரிந்து

கொண்டாடும் தீபாவளியில்

வெடிக்கப் போவது பட்டாசுகள் மட்டுமல்ல..

என் மனமும்தான்....



--சிவசங்கர்

Monday, October 18, 2010

என் பார்வை..

காதலுக்காய் ஏங்கும்
என் கலங்கிய முகத்துடன்,
மலர்ந்த உன் முகத்தை
மறைந்திருந்தே பார்க்கிறேன்!


--சிவசங்கர்.
(இரவு ராசாவின் இனிய புகைப்படத்தைப் பார்க்கையில் தோன்றியது..நீங்களும் பாருங்களேன்)

Saturday, October 16, 2010

காதல்...கவி....


விலகியிருந்த என்னை

மீண்டும் கவியியற்றத் தூண்டியது

உன் காதல்!


தள்ளியிருந்த என்னை

காதலிக்கத் தூண்டியது

உன் முத்தம்!


காதலைத் தூண்டிய நீயும்,

கவிதையைத் தூண்டிய காதலும்,

உன்காதல் வழிவந்த முத்தமும்,

நீக்கமற நிறைந்துவிட்டது

என்மனதில்!


-- சிவசங்கர்.


Friday, October 15, 2010

காதலியின் முத்தம்....

நீ

திகட்டத் திகட்டக்

கொடுத்த முத்தம்,

உன்னைக் காதலிக்காமல்

இருக்க விடுவதில்லை!



-- சிவசங்கர்.

Thursday, October 14, 2010

ஏக்கம்!

ஐந்திலக்கச் சம்பளம்,

பெருசா ஒரு கம்ப்யூட்டர்,

வண்ணத் தொலைபேசி,

வாசமான சென்ட்டுகளும்,

வாய் நெறையச் சிரிப்போடு

ஊருவிட்டு ஊரு வந்தோம்.

மக்களும் பவுசுதான்,

மரியாதை பெருசுதேன்.

ஏசி ரூமுதான்,

பேச்செல்லாம் கோடிதான்,

விடுப்புக்குப் போறதெல்லாம்

விமான மார்க்கம்தான்.

கோமாளி வேடிக்கை,

கையில வாட்சும்,

சிறுசு பெருசா புத்தகமும்,

ஒட்டாம ஓடுது வாழ்க்கை!

மாடு மேச்சுப் பால் கறந்து,

ஏரோட்டி, ஊர் சுற்றி,

சிறுசு பெருசாப் பஞ்சாயத்துப் பண்ணி,

அம்மா கையில் சோறுண்ணும்

எம்மனோரைப் பார்க்கையிலே,

ஏங்கித்தான் போகுது மனசு..



--ஏக்கத்துடன்,

சிவசங்கர்.

உந்தன் நினைவு!


வெட்கமின்றிப் பேசித் தீர்த்த
வார்த்தைகளும்,

இடைவெளியற்று கட்டுற்றிருந்த
நினைவுகளும்,

தனிமையிலும் வெறுமையிலும்

நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது
உன்னை!
--சிவசங்கர்.

முத்தம்....

மௌனமான நொடியில்

உன் பூவிதழில் கொடுத்த

ஈரமான முத்தம்,

இனித்துக்கொண்டே இருக்கிறது

என்னில்!


--சிவசங்கர்.

Wednesday, October 13, 2010

காதலியே.......


நான் கொடுத்த

முத்தமெல்லாம்

கணக்கிட்டு வைக்காமலிருக்கும்

நீயெல்லாம் என் காதலியா?


--சிவசங்கர்.

Saturday, October 9, 2010

காதல் வரைமுறை!


நீ பெயர்த்த மனதைப்

பெயரளவில் கவர்ந்துகொண்டால்,

காதல்!


--சிவசங்கர்.

முத்தம்பற்றி....


அழகான உன் உதட்டோர

மச்சத்தின்,

இதமான தழுவல்தான்

முத்தமோ?


--சிவசங்கர்.

Friday, October 8, 2010

மோதல்-காதல்!


மோதல் செய்த வினை

இன்று

காதல் செய்கிறேன்!



-- சிவசங்கர்.

Thursday, October 7, 2010

காதல் முத்தம்!


விருட்டென எழுந்து செல்கையில்

என் கரம்பிடித்துக் கொடுத்த

இதழோர முத்தத்திற்காய்

காதலித்துக் கொண்டே

இருக்கலாம் உன்னை!


--சிவசங்கர்.

Tuesday, October 5, 2010

அழகு முற்றம்!

எத்தனை முயன்றும்
தோற்றேன்!
உன் அழகுக்கு முன்னால்
என் கவிதையெல்லாம்
அழகாகவே தோன்றவில்லை!

--சிவசங்கர்.

Tuesday, September 21, 2010

என்செய்வேன்?

உன் பெயரைத்
தாளில் எழுதினால்,
கவிதையாகிவிடுகிறது.
சுவற்றில் எழுதினால்,
ஓவியமாகிவிடுகிறது.
கல்லில் எழுதினால்,
சிற்பமாகிவிடுகிறது- ஆதலால்,
உன்பெயரை என்னுள் எழுதினேன்.
காதலாகிவிட்டது!

-- சிவசங்கர்.

Monday, September 13, 2010

கவிதைகளின் நேரம்!

பதிலுரைக்கவே விழைகிறேன்,
உன் கேள்விகளின் போதெல்லாம்!
உன்னிடம் பதிலாக மௌனமும்,
என்னிடம் பதிலாகக் கவிதையும்
முளைக்கின்றன!

-- சிவசங்கர்.